தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் பாஜகவின் அண்ணாமலை, தமிழிசை, வினோஜ் கைது

2 mins read
டாஸ்மாக் ஊழல்: பாஜகவின் முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்க திமுக அதிரடி நடவடிக்கை
afb5755f-ae91-49d5-8ab3-02c029767327
பாஜகவினர் தடையை மீறி போராட்டத்தில் குதிக்கலாம் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் வீடுகளின் முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அண்மையில், அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை மேற்கொண்டது. அந்தச் சோதனையில், டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தமிழ்நாடு அரசியலில் பெரியளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்​மாக் மூலம் ரூ.1,000 கோடி முறை​கேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

இந்தக் குற்றச்சாட்டையடுத்து, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்நிலையில் மார்ச் 17ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக அறிவித்திருந்தது. அதையடுத்து, சென்னையில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீடுகளின்முன்பு காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வீட்டின் முன்பும் காவலர்கள் முகாமிட்டுள்ளனர். அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் காவல்துறை அவரைக் கைதுசெய்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் கைது செய்யப்பட்டார். இந்தப் போராட்டத்துக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாஜக உறுப்பினர்கள் சென்னை நோக்கி வந்த நிலையில், அவர்களைக் காவலர்கள் தடுத்து வைத்ததாக எக்ஸ் தளத்தில் வினோஜ் பி.செல்வம் பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், டாஸ்மாக் அலுவலகப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அண்ணாமலை, களத்தூரில் உள்ள வீட்டிலிருந்து எழும்பூருக்கு வந்தார்.

அப்போது, சென்னையை அடுத்த அக்கரையில்வைத்து அண்ணாமலையைக் காவலர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் வீடுகளின் முன்பும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பாஜகவினர் போராட்டத்தில் குதிக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக, தமிழகக் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “திமுக​வின் ஊழலைக் கண்டித்து மார்ச் 17ஆம் தேதி திங்கட்கிழமை டாஸ்​மாக் தலைமை அலு​வல​கம் அமைந்​துள்ள சென்னை தாள​முத்து நடராசன் மாளிகையை முற்​றுகை​யிடும் போ​ராட்​டம் நடை​பெறும்,” என்று அறிவித்திருந்தார்.

சென்னையில் உள்ள தி.நகரில் வசித்து வரும் பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் தலைமையில் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அவர் முதலில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டார். 

குறிப்புச் சொற்கள்