கரூர்: பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 35 இடங்களில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை மீண்டும் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கரூரில் கொங்கு உணவக உரிமையாளர் மணி என்பவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர், கொங்கு உணவகம் மணி ஆகியோருக்குச் சொந்தமானவை உட்பட 20 இடங்களில் சென்ற மே 26ஆம் தேதி முதல் எட்டு நாள்களுக்கு வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஐந்து இடங்களை அவர்கள் முத்திரை வைத்து மூடிச் சென்றனர். பின்னர் ஜூன் 23ஆம் தேதி மீண்டும் அவ்விடங்களில் சோதனை இடம்பெற்றது.
அப்போது, கொங்கு உணவகம் மணிக்குச் சொந்தமான, அவர் தொடர்பான இடங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை துணை ராணுவப் படையினரின் பாதுகாப்போடு வந்த வருமான வரித்துறையினர் மீண்டும் அவரது வீட்டில் சோதனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 35 இடங்களிலும் வருமான வரித்துறைச் சோதனை இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணமோசடி தொடர்பில் ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். பின்னர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பிறகு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை தொடர்கிறது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தொடர்பாக இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து, மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவல் புதன்கிழமையுடன் முடிவிற்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.