பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தொடரும் ஆசிரியர் போராட்டம்

2 mins read
b9857192-6f5c-4f23-9aae-844ce4682fdc
தமிழ் நாட்டின் இடைநிலை ஆசிரியர்களும் பகுதிநேர ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: தி இந்து திசை

சென்னை: பொங்கல், மாட்டுப் பொங்கல், மஞ்சு விரட்டு என நீண்ட விடுமுறைக்குப் பின் பள்ளிகள் மீண்டும் ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்படுகின்றன. இந்நிலையில், பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் நின்றபாடில்லை.

கடந்த டிசம்பர் 29ஆம் தொடங்கிய தொடர் போராட்டங்களுக்குப் பின் ஆசிரியர்கள் வலியுறுத்தும் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து ஆசிரியர்கள் தமிழ் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித் துறை மற்றும் காவல்துறையினர் பல முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை.

இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இடைநிலை ஆசிரியர்களுடன் ஜன.14ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு, பல்வேறு ஆசிரியர் சங்கங்களை அழைத்து கருத்துக் கேட்டது. இருப்பினும், ஆய்வுக்குழுவின் நடவடிக்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லையெனத் தெரிகிறது.

இதனால் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர், ஆட்சியர் அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே கடந்த டிசம்பர் 26ஆம் தேதி முதல் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஆசிரியர்கள் 23 நாளாக சென்னை, சைதாப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் வழக்கம்போல் அவர்கள் கைது செய்யப்பட்டு அருகேயுள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இடைநிலை ஆசிரியர்களைப் போல் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பிலும் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை விடுத்து, சென்னை டிபிஐ வளாகம் அருகே பத்தாவது நாளாக போராட்டம் நடைபெற்றது.

பொங்கல் விடுமுறைக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நேரத்தில், ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று கல்வியாளர்களும் பெற்றோர்களும் தமிழ் நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்