காலையில் ஆசிரியர்கள் போராட்டம்; மாலையில் கிடைத்தது சம்பளம்

1 mins read
016fc55b-bfce-4e4e-8ebf-9ce2ddcf615b
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள். - படம்: ஊடகம்

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்திற்கு 2,165 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காததைக் கண்டித்து அனைத்து ஆசிரியர் சங்கங்கள், அமைச்சு பணியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, மாநில அரசு சம்பளத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்கும் என்று சொன்னார். அதற்கேற்றவாறு, அன்று இரவே ஆசிரியர்கள் செப்டம்பர் மாதச் சம்பளத்தைப் பெற்றனர்.

ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து ஆர்.எஸ்.பாரதி பேசியபோது, “மத்திய அரசு இந்தாண்டு தமிழகத்துக்கு வழங்கவேண்டிய 2,165 கோடி ரூபாய் நிதியை வழங்காததால் கடந்த ஏப்ரல் முதல் தமிழக அரசே ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கி வந்தது.

“இந்த மாதம் சம்பளம் வழங்க முடியாதநிலையை குறித்து மத்திய அரசிடம் தெரிவித்தோம். இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. ஆனாலும், மாநில அரசு உடனடியாக 100 கோடி ரூபாயை விடுவிக்கும். தி.மு.க., அரசு வாக்குறுதியை நிறைவேற்றும் அரசு; காற்றில் பறக்க விடாது,” என்று அவர் பேசினார். அதன்படி அன்று மாலையே ஆசிரியர்களுக்கான சம்பளம் விடுவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்