தொழில்நுட்பக் கோளாறு: நடுவழியில் நின்ற சென்னை மெட்ரோ ரயில்

2 mins read
b1af45c7-0959-4040-910a-9e64b5215ce8
ரயில் நின்ற இடத்திலிருந்து கிட்டத்தட்ட 500 மீட்டர் தொலைவிலிருந்த மெட்ரோ நிலையமான உயர்நீதிமன்ற நிலையத்திற்கு நடந்துசென்ற பயணிகள். - படங்கள்: ஊடகம்

சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் பழுதானது.

டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலை நடந்த அச்சம்பவத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வட தமிழகத்தை அச்சுறுத்திய டிட்வா புயல் வலுவிழந்து, சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டதால், கடந்த இரு நாள்களாகச் சென்னை முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

திங்கட்கிழமை காலை சென்னை, அதையொட்டியுள்ள புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீர் தேங்கியது.

இதனால், வேலைக்குச் செல்லும் பலரும் பேருந்துகளுக்குப் பதிலாக மெட்ரோ ரயில்களை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கினர்.

இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாற்றால் சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயில் பழுதானது.

20க்கும் மேற்பட்டோர் பயணித்த அந்த ரயிலின் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சுரங்கத்துக்குள் மெட்ரோ ரயில் சிக்கியது.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாகப் பயணிகள் ரயில் உள்ளே சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, ரயில் நின்ற இடத்திலிருந்து கிட்டத்தட்ட 500 மீட்டர் தொலைவிலிருந்த மெட்ரோ நிலையமான உயர்நீதிமன்ற நிலையத்திற்குப் பயணிகள் நடந்து செல்லுமாறு அறிவிப்பு வெளியானது.

அதனைத் தொடர்ந்து, சுரங்கப்பாதையிலிருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

நடுவழியில் ரயில் நின்றதற்கு மின் தடை அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோளாறு சரிசெய்யப்பட்டு, மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் மீண்டும் இயங்கத் தொடங்கின.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்திற்கும் மத்திய மெட்ரோ நிலையத்திற்கும் இடையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் நின்றது. பழுது சரிசெய்யப்பட்டு காலை 6.20 மணிக்கு ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின,” எனக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்