மீரட்: மூன்று ஆடவர்கள் கும்பலாகச் சேர்ந்து 17 வயதுப் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் அவரது தோழியான 19 வயதுப் பெண் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் நிகழ்ந்தது.
மீரட்டுக்கும் புலந்த்ஷருக்கும் இடையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் அந்தப் பெண் உயிரிழந்ததாகக் காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
நிகழ்வு மேலாண்மை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் 17 வயதுப் பெண் தமது தோழியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 6) இரவு சந்தீப் சிங், அமித் குமார் என்னும் இளையர்களுடன் காரில் சென்றார். அந்த இருவரும் 20களின் தொடக்கத்தில் உள்ளவர்கள்.
பின்னர், வழியில் காரை மறித்து கௌரவ் குமார், 22, என்பவரும் ஏறிக்கொண்டார்.
மூன்று ஆடவர்களும் இரு பெண்களும் காரில் பல இடங்களில் சுற்றினர். காருக்குள்ளேயே அவர்கள் மதுபானம் அருந்தினர்.
மீரட்டைக் கடந்து லக்னோ நோக்கி கார் சென்றபோது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென தம்மை வன்கொடுமை செய்ய ஆடவர்கள் முயன்றபோது 19 வயதுப் பெண் அதனை எதிர்த்தார். அப்போது காரில் இருந்து அந்தப் பெண்ணை மூன்று ஆடவர்களும் தள்ளிவிட்டனர்.
பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஏறியதில் அந்தப் பெண் அங்கேயே மாண்டார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர், 17 வயதுப் பெண்ணை மூவரும் காருக்குள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்தனர். இரவு முழுவதும் அந்தக் கொடுமை நீடித்தது. அதிகாலையில் கர்ஜா என்ற இடத்தில் கார் சென்றபோது ஒருவழியாக ஆடவர்களிடமிருந்து அந்தப் பெண் தப்பித்தார்.
கர்ஜா நகர் காவல்நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து குற்றவாளிகள் மூவரும் என்கவுன்டர் முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்யப்பட்டனர். அப்போது, சந்தீப், கௌரவ் இருவரின் கால்களில் தோட்டாக்கள் பாய்ந்தன.
அந்தச் சம்பவத் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக புலந்த்ஷர் ஊரகக் காவல்துறைக் கண்காணிப்பாளர் தேஜ்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

