தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவல்துறையினரைத் தாக்கிய 17 வயதுச் சிறுவன்மீது துப்பாக்கிச் சூடு

2 mins read
03310c2e-e530-42a0-8fcf-c761fdba5074
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பாப்பாக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே அரிவாளால் வெட்ட முயன்றதாக 17 வயதுச் சிறுவன்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

திருநெல்வேலி பாப்பாகுடியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைக் காவல்துறையினர் தடுத்தபோது, காவல்துறையினரை 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அந்தச் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

காயமடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளான். தப்பியோடிய மற்றொரு சிறுவனும் பிடிபட்டுள்ளான்.

சிறுவன் தாக்கியதில் காயமடைந்த சக்திகுமார், காவலர் ரஞ்சித் இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

திருநெல்வேலி பாப்பாக்குடி கிராமத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள், அதே ஊரைச் சேர்ந்த சக்திகுமார், 22, என்பவரை வரவழைத்து, “நாங்கள் செய்யும் ரவுடித்தனத்தை எப்படி காவல்துறைக்குத் தெரிவிக்கலாம்,” என்று அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறைனர் மீது இரு சிறுவர்களும் தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.

தாக்குதலில் தமிழ்நாடு சிறப்புப் படை காவல்துறை அதிகாரி ரஞ்சித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதனைத் தடுக்க சென்ற உதவி காவல் ஆய்வாளர் முருகனையும் சிறுவர்கள் வெட்ட முயற்சி செய்து உள்ளார்கள்.

தங்களைத் தற்காத்துக்கொள்ள காவலர்கள் ஒரு வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர். சிறுவர்கள், அந்த வீட்டின் கதவை உடைக்க முயற்சித்துள்ளனர். வீட்டிலிருந்த பெண்ணையும் குழந்தைகளையும் காப்பாற்றும் நோக்கில் காவல்துறையினர் கதவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ஒரு சிறுவனுக்கு மார்பில் காயம் ஏற்பட்டது. மற்றொரு சிறுவன் தப்பி ஓடியுள்ளான்.

விசாரணையில், ஏற்கனவே இந்தச் சிறுவர்கள்மீது பாப்பாக்குடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்