ஹைதராபாத்: தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 விழுக்காட்டு இடஒதுக்கீடு கேட்டு ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன.
ஆளும் கட்சியினரும் தொழிலாளர்களும் ஹைதராபாத் மற்றும் பிற முக்கிய இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் தீவிரமாக பங்கேற்றனர். ஆர்டிசி பஸ் பணிமனைக்கு வெளியே போராட்டம் நடத்தி, பொதுப் பேருந்துகள் இயங்குவதைத் தடுத்தனர்.
அந்தப் போராட்டத்தால் தீபாவளியைக் கொண்டாட, சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மாநிலம் முழுவதும் கடைகள், கடைத்தொகுதிகள் மூடப்பட்டன. இதனால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க இருந்த பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
போராட்டங்களின்போது, ஒரு சில அமைப்பு தொழிலாளர்கள், ஒரு பெட்ரோல் பம்பை தாக்கி சேதப்படுத்தினர், மேலும் அருகிலுள்ள கடைகளையும் தாக்கினர்.
தெலுங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் 42 விழுக்காட்டு இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் அமைப்புக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 42 விழுக்காட்டு இடஒதுக்கீடு வழங்கும் அரசாங்க உத்தரவை உயர் நீதிமன்றம் அண்மையில் தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.
இதுகுறித்துப் பேசிய அமைச்சர் தனசாரி சீதக்கா, “தெலுங்கானாவில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினராலும் 42 விழுக்காட்டு இடஒதுக்கீடு கோரி இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்தோம். இதுவரை, எங்களுக்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மக்கள் அந்த 42 விழுக்காட்டு இடஒதுக்கீட்டை விரும்புகின்றனர். அதற்காக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்,” என்றார்.

