சென்னை: வரும் நாள்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ்வரை உயரலாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.
குறிப்பாக, 26ஆம் தேதி புதன்கிழமையிலிருந்து 29ஆம் தேதி சனிக்கிழமைவரை இந்த உயர்வு இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும் ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே, அடுத்த மூன்று, நான்கு நாள்களில் இந்தியாவின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்தக் காலகட்டத்தில் நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸ்வரை அதிகரிக்கலாம் என்றும் அது எச்சரித்துள்ளது.
அடுத்த நான்கு, ஐந்து நாள்களில் நாட்டின் மத்தியப் பகுதியிலும் மகாராஷ்டிர மாநிலத்தின் உட்புறப் பகுதிகளிலும் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, குஜராத்திலும் அடுத்த மூன்று நாள்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயரலாம் என்றும் அதன் கடலோரப் பகுதிகளில் புழுக்கமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வானிலை குறித்து முன்னெச்சரிக்கும் அமைப்புகளில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும்படி ஐநா உறுப்பு நாடுகளுக்கு உலக வானிலை நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முன்னுரைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தாலும் கண்காணிப்புக் கட்டமைப்புகள், துல்லியத்தன்மை, பருவநிலை சார்ந்த தரவுகளைப் பெறுதல் ஆகியவற்றில் இன்னும் இடைவெளிகள் இருப்பதாக அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடற்பரப்பு சூடாவதும் கடல்மட்டம் உயர்வதும் விரைவடைந்து வரும் நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு இதுவரையிலும் ஆக வெப்பமான ஆண்டு என்று அவ்வமைப்பு அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.