கோவில் நிதி பயன்பாடு: அறநிலையத்துறைத் திட்டங்களை ரத்து செய்த நீதிமன்றம்

2 mins read
b129396c-6edb-4e07-a72a-961e6972b6c9
அறநிலையத் துறையின் கோவில் நிதிப் பயன்பாட்டுத் தொடர்பான உத்தரவுகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. - படம்: இணையம்

மதுரை: கோவில்களுக்குச் சொந்தமான நிதியிலிருந்து பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்களை அமைக்கும் தமிழக அறநிலையத்துறையின் அறிவிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவில்களுக்குச் சொந்தமான நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்க அறநிலையத்துறை, 2021 - 2022ல் வெளியிட்ட அறிவிப்பு அறநிலையத்துறை சட்டத்திற்குப் புறம்பானது என்று திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

“பக்தர்கள், நன்கொடையாளர்களிடமிருந்து கோவில்களுக்கு நிதி வசூலிக்கப்படுகிறது. மத நோக்கங்களுக்காக அல்லது திருவிழாக்கள் நடத்த அல்லது கோவில்களின் பராமரிப்பு, மேம்பாட்டிற்காக நன்கொடை வழங்கப்படுகிறது.

“கோவில் நிதியைப் பொது அல்லது அரசு நிதியாகக் கருத முடியாது. அதைப் பொது நோக்கங்களுக்காக அரசின் நிதியாகப் பயன்படுத்த முடியாது,” என்று நீதிமன்றம் கூறியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிதியிலிருந்து திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைக்கு எதிரான மற்றொரு வழக்கில் இந்நீதிமன்றம் ஆகஸ்ட் 19ஆம் தேதி உத்தரவிட்டது. அதே உத்தரவு இவ்வழக்கிற்கும் பொருந்தும். கோவில் நிதியில் வணிக வளாகம், கல்வி நிறுவனம், திருமண மண்டபங்கள் அமைக்கும் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் கூறியது.

அதே தீர்ப்பை வலியுறுத்தி, மற்றொரு பொதுநல மனுவிலும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மதுரை கள்ளழகர் கோவிலில் 40 கோடி ரூபாயில் கழிப்பறை, முக்கியப் பிரமுகர்கள் தங்கும் விடுதி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கடைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ள, தமிழக அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டது. பணியைக் கோவில் நிதிமூலம் மேற்கொள்ள அனுமதித்தது அறநிலையத்துறை சட்டத்திற்குப் புறம்பானது. கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கள்ளழகர் கோவில் சவுரிராஜன் பொது மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில், “கோவில் கடைகளில் பூஜை பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என, உத்தரவாதம் அளிக்க வேண்டும். கோவில் நிதியை அரசின் நிதியாகக் கருத முடியாது. அந்நிதியை மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது. கடைகள், உணவருந்தும் கூடம், முக்கியப் பிரமுகர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்