வேலூர்: காலஞ்சென்ற திரைப்பட நடிகரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆருக்கு காட்பாடியில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
அக்கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) குடமுழுக்கு நடக்கவுள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காட்பாடி அருகில் உள்ள கரசமங்கலம் கிராமத்தில் மும்மத அடையாளங்களுடன் இந்தக் கோவிலை எம்ஜிஆரின் தீவிர தொண்டரான டி.ஆர்.முரளி கட்டியுள்ளார்.
‘தனிப்பிறவி’ என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் முருகப்பெருமான் வேடத்தில் நடித்திருப்பார்.
அத்தோற்றத்தை உடைய, ஏறக்குறைய 5 அடி உயரச் சிலை இக்கோவிலுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் முன்பகுதியில் எம்ஜிஆர் மூன்று மதங்களுக்கும் உரியவர் என்பதைச் சித்திரிக்கும் வகையில், மற்றொரு சிலை வைக்கப்பட உள்ளது.
“இந்தக் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற உள்ளது. மேலும் எம்ஜிஆர் பாடல்களைத் தொகுத்து அதைத் திருக்குறள் வடிவில் 48 நாள் மண்டல பூசை முடிந்து வெளியிட உள்ளோம்,” என்று டி.ஆர்.முரளி கூறியுள்ளார்.

