தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தமிழக அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை

மழையால் சிதைவுறும் கோயில்கள்: பாதுகாக்க நடவடிக்கை தேவை

2 mins read
8718fce4-9c2a-4dbb-9d5f-ce4003a35b0a
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலைச் சூழ்ந்துள்ள மழை நீா். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: இயற்கை சீற்றங்களால் கோவில்களில் ஏற்படும் பாதிப்புகளை அறநிலையத்துறை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர் மழையின் காரணமாக திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோயிலை சூழ்ந்து வெள்ளநீர் செல்கிறது.
தொடர் மழையின் காரணமாக திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோயிலை சூழ்ந்து வெள்ளநீர் செல்கிறது. - படம்: தமிழக ஊடகம்

சங்கிலித் தொடர் போல தஞ்சாவூர் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலைச் சூழ்ந்த மழைநீர் கருவறை வரை தேங்கி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோவில்களின் நிலைமை அவலநிலையாகவே உள்ளது.

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நமது அரசர்களும், முன்னோர்களும் திட்டமிட்டு எப்படிப்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கோவில்கள் பாதிக்கப்படாதவாறு முன்னேற்பாடுகளை செய்து வைத்தனர்.

தற்போது தமிழக அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்கும் நீர் மேலாண்மை குறித்த சிறப்புத் திட்டங்கள் இல்லை. கோவில்களைச் சுற்றியுள்ள பல குளங்கள் காணாமல் போய்விட்டன.

மழைநீர் தேங்குவதால் பழமையான கோவில்களின் சுவர்கள் அரிக்கப்படுகிறது. மேலும் கோவில்களைச் சுற்றி உள்ள பகுதிகளில் சாலைகளை உயரப்படுத்தி அமைத்து விடுகின்றனர். கோவில் கீழே சென்று விடுவதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கிவிடுகிறது.கோயில்கள் சாலையைவிட கீழே சென்று விடுவதால் சிதம்பரம், ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களின் சிற்ப வேலைப்பாடுகள் கூட மறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேங்கிய மழை நீரை வெளியேற்ற தமிழக அரசு, சுற்று வேலிகள் அமைத்தல், மழைநீர் தனியாக செல்ல குழாய்கள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதில்லை. தற்போது உள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மழைநீர் கோவிலுக்குள் வராதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.

பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழகத்தின் அனைத்து கோவில்களையும், இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்