இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கவே பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநர் ரவி

2 mins read
3fbddc14-0280-4fc7-ad2b-77fe2b733a80
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: இந்தியாவின் வளா்ச்சியைத் தடுக்கவே அதன் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதாக தமிழக ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்னை கிண்டியிலுள்ள ஆளுநா் மாளிகையில் நிகழ்ச்சி ஒன்று சனிக்கிழமை நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவில் நாடாளுமன்றம் மீது தாக்குதல், மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவந்த பாகிஸ்தான், தற்போது இந்திய எல்லைப் பகுதியிலும் பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

“அந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் பலா் உயிரிழந்துவிட்டனா்.

“நமது நாட்டின் குடிமக்கள் தாக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் நாடு இந்தியா. அதைச் சீா்குலைக்கும் வகையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தூண்டி விடுகிறது.

“மேலும், பல பொய்யான தகவல்களைப் பரப்பி இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீா்குலைக்கும் செயலிலும் அந்நாடு ஈடுபட்டு வருகிறது. நமது நாடு வளா்ச்சியை நோக்கி செல்வதைத் தடுக்கவே, இம்மாதிரியான பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.

“இத்தகைய சூழலில் நாம் அனைவரும் வேற்றுமைகளைக் கடந்து தேசத்துக்காக ஒன்றுபட்டு நிற்க வேண்டும்,” என்று ஆர்.என்.ரவி பேசினார்.

மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா எப்போதும் வெற்றியடையும்,” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருப்பது மட்டுமன்றி, இந்திய ராணுவத்துக்கும் பக்கபலமாக இருக்கும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்