சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, நூறு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட அவர், தனது கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘கேமரா’ சின்னத்தை வழங்கியுள்ளது என்று அவர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தவாக, தொகுதிப்பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, அதிலிருந்து விலகிவிட்டது.
இந்நிலையில், சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி இக்கட்சி சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி, கடலூர், நெய்வேலி ஆகிய பகுதிகளில் தவாகவுக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த முறை திமுக கூட்டணி சார்பாக, பண்ருட்டி தொகுதியில் களமிறங்கிய வேல்முருகன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, விஜய் களமிறங்கும் பெரம்பூர் தொகுதி உள்ளிட்ட பல தொகுதிகளில் தவாக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

