கள்ளக்குறிச்சி: பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கைதான தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி தனித்தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கடந்த ஜூலை மாதம் அந்தப் பெண் ஆட்சியர்க்கு அத்தகைய குறுஞ்செய்தியை அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அருள் விக்னேஷ்மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தின. இதற்கிடையே, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இவ்விவகாரத்தை விசாரித்தது.
ஏழு நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்குமாறு தமிழகக் காவல்துறைத் தலைவர்க்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணனும், அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி தாக்கல் செய்த மனுவை விசாரித்தார்.
விசாரணை அதிகாரிகளை நியமித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழகக் காவல்துறைத் தலைவருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, பாதிக்கப்பட்ட அதிகாரியிடம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஷானாஸ் நவம்பர் 23ஆம் தேதி புகாரைப் பெற்றார்.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின்கீழ் எம்எல்ஏ அருள் விக்னேஷ்மீது வழக்கு பதியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரை வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) கைதுசெய்தனர்.
தியாகதுருகத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவரை டிசம்பர் 11ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
