சென்னை: விநாயகர் சிலைக்கு அணிவித்த 10,000 ரூபாய் பண மாலையை திருடிச் சென்றதாக நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன், 33, என்பவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார்.
அதன்படி, கடந்த 13ஆம் தேதி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினார். இரு நாள்கள் கழித்து, கடந்த செவ்வாய்க்கிழமை அந்தச் சிலைக்கு 100 ரூபாய் நோட்டுகளால் தயார்செய்யப்பட்ட 10,000 ரூபாய் பணமாலையை அணிவித்தார்.
பின்னர் இரவு வரை விநாயகர் சிலை அருகில் இருந்த விக்னேஷ்வரன், அதன்பிறகு வீட்டுக்குச் சென்றார்.
மறுநாள் அதிகாலையில் விநாயகர் சிலையைப் பார்த்தபோது, சிலைக்கு அணிவித்திருந்த ரூ.10 ஆயிரம் பண மாலை காணாமல் போனதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அச்சம்பவம் பற்றி ஆர்கே நகர் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் கிடைத்த தகவல்களின்படி, திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 20 மற்றும் 19 வயதுடைய இரு இளையர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். பின்னர் 16 மற்றும் 17 வயதுடைய நான்கு சிறுவர்களும் பிடிபட்டனர்.
திருடிய 10,000 ரூபாயில் செலவழித்தது போக 5,100 ரூபாயை அவர்கள் வைத்திருந்தனர். அதனைக் காவல்துறைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.
