சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்குள் பல்வேறு சிறிய பிரச்சினைகள் நிலவி வருகிறது என்றும் அவை அனைத்தும் சில நாள்களில் சரியாகிவிடும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகனான அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட பிளவு நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. இதனால் கட்சியைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டியும் நிலவுகிறது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் புதிய உறுப்பினர் அட்டையை வெளியிட்டார் அன்புமணி.
பின்னர் பேசிய அவர், கட்சியில் நிலவும் சின்னச் சின்னக் குழப்பங்களை எல்லாம் நிர்வாகிகள் தங்கள் மனதில் சுமையாக ஏற்றிக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.
“அனைத்துச் சிக்கல்களும் சில நாள்களில் சரியாகிவிடும். அதன் பின்னர் நாம் வேகமாக முன்னேறுவோம்.
“நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே, துணிச்சலுடன் செயல்படுங்கள். கட்சியிலும் வெளியிலும் எந்தப் பிரச்சினை வந்தாலும் நான் உங்கள் பக்கம் இருப்பேன்,” என்றார் அன்புமணி.
பாமகவில் நிரந்தரத் தலைவர் என யாரும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், பாமக ஒரு ஜனநாயக கட்சி என்றும் பொதுக்குழு தேர்வு செய்பவருக்கே கட்சியில் அதிகாரம் என்றும் தெரிவித்தார்.
“நிரந்தரமாக இங்கு யாரும் தலைவராக இருக்க முடியாது. நான்தான் பெரியவன் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னை நீங்கள் தலைவராகத் தேர்வு செய்தீர்கள். நான் ஒரு தொண்டனாகச் செயல்படுகிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“பாமக எல்லா மதத்தினருக்கும் உரிய கட்சி. நம்மிடம் தெளிவான கொள்கை இருக்கிறது,” என்று அன்புமணி மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே, பாமகவின் முன்னாள் நிர்வாகிகளான பேராசிரியர் தீரன் உள்ளிட்ட பலர் ராமதாஸ், அன்புமணி இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பாமக எம்எல்ஏக்கள் எந்தத் தரப்பை ஆதரிப்பார்கள், அக்கட்சி யார்வசம் செல்லும் எனும் கேள்விகள் எழுந்துள்ளன.