சென்னை: தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள் எவை என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன. இந்நிலையில், அந்த விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள், பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்யவோ தடை விதிக்க வேண்டும் என சிவாச்சாரியார்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, முறையாக அர்ச்சகருக்குப் படித்த நபர்களை தகுதியின் அடிப்படையில் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்குகள் இரு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களைக் கண்டறியும் குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, அரசு தரப்புக்கும் அர்ச்சகர்களுக்கும் இடையே கருத்து முரண் ஏற்பட்டது.
அப்போது சர்ச்சைக்குரியவர்களை குழுவில் சேர்க்க வேண்டாம் எனத் தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, அடுத்த மூன்று மாதங்களுக்குள் தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றி அன்றாடப் பூசைகள் நடக்கும் கோவில்கள் எவை என்பதை அடையாளம் காண வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை 2026 ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.