சென்னை: எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற பெருநகரமாக சென்னையை மாற்றும் நோக்கத்துடன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூன்றாவது சென்னை பெருந்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
சென்னை மாநகரை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்குழுமம் தெரிவித்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சென்னை பெருந்திட்டம் குறித்து பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வேகமாக அதிகரித்து வரும் நகர்மயமாக்கல், மாறிவரும் பொருளியல் சூழல், உட்கட்டமைப்புத் தேவைகள், பருவநிலைச் சவால்களை எதிர்கொள்ள ஒரு நீண்டகால விரிவான திட்டமிடல் சென்னைக்கு அவசியமாகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, 2021ஆம் ஆண்டிலேயே மூன்றாவது பெருந்திட்டம் தயாரிப்பதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
சென்னை மாநகரப் பெருந்திட்டங்கள்
கடந்த 1976ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது பெருந்திட்டம், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும் வளையச் சாலைகள் அமைப்பதையும் முதன்மை இலக்காகக் கொண்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து 2006 முதல் 2026 வரையிலான இரண்டாவது பெருந்திட்டம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், நீர்நிலைப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தது.
தற்போது செயல்படுத்தப்படும் மூன்றாவது பெருந்திட்டம், 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய நிலப்பகுதிக்கான நீடித்த, நிலையான நகர்ப்புற வளர்ச்சியை உறுதிசெய்யும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஆய்வுகளைப் பயன்படுத்தி, புவியியல் தகவல் அமைப்பு மூலமாக மின்னிலக்கம் அடிப்படையிலான துல்லிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2047ஆம் ஆண்டிற்குள் சென்னை பெருநகரப் பகுதியின் ஒருங்கிணைந்த சமச்சீர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், விரிவாக்கப்பட்ட பகுதிகளையும் இதனுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டப் பணிகளை இறுதி செய்யவும் அனைத்துலக அளவில் அனுபவம்வாய்ந்த திட்ட ஆலோசகரை நியமிக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


