துணை முதல்வர் பதவி கேட்கவில்லை: திருமாவளவன்

துணை முதல்வர் பதவி கேட்கவில்லை: திருமாவளவன்

கோப்புப் படம்: ஒன் இந்தியா தமிழ்

11 May 2026 - 3:55 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு ஆதரவளிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது முற்றிலும் பொய்யான தகவல் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு, அமைச்சர் பதவிகளுக்காகத் தவெக தரப்புடன் இதுவரை விசிக எந்தவிதப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், விசிகவைக் குறிவைத்துச் சில தரப்பினர் பொய்த் தகவல்களைப் பரப்புவதாகச் சாடியுள்ளார்.

முன்னதாக, தவெகவுக்கு ஆதரவு அளிக்க விசிக முன்வந்திருப்பதாகத் தகவல் வெளியான போதும் விஜய்யிடம் ஆதரவுக் கடிதம் அளிக்க விசிக தரப்பு இழுத்தடித்தது.

இதனால் தவெக தொண்டர்கள் சமூக ஊடகங்களில் விசிகவைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். தவெகவுடன் விசிக குதிரைபேரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சமயச் சார்புள்ள கட்சிகள் எந்த வடிவத்திலும் தமிழகத்தில் கால்பதித்துவிடக் கூடாது என்பதில் விசிக உறுதியாக இருப்பதாகத் திரு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒற்றை நோக்கத்துக்காக மட்டுமே தவெகவுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ள அவர், கொள்கை ரீதியாக மட்டுமே விசிகவின் ஆதரவு நீடிப்பதாகவும் சுயநலப் பதவிகளுக்காக அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திருமாவளவன்விசிகஆதரவுமுதல்வர்விஜய்