திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இரா. நல்லகண்ணு பெயர்

திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இரா. நல்லகண்ணு பெயர்

கோப்புப்படம்: ஊடகம்

26 Dec 2024 - 9:07 pm

1 mins read

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் இரா.நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா. நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, நல்லகண்ணு பெயரைச் சூட்டிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திரு இரா. நல்லகண்ணுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த ஊரான திருவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் கட்டுவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

திருவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு ‘தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்’ எனப் பெயரிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்