சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ள பாரதியார் மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் விழா சனிக்கிழமை (மே 30) நடைபெற்றது.
இந்த விழாவிற்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கினார்.
அந்த விழாவில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற படம் வைக்கப்பட்டதற்குப் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், வைகாசியில் தனியாக விழா எடுத்தது மட்டுமன்றி, காவி உடை அணிவித்து அவரை உருவகப்படுத்தியது உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அச்செயலுக்கு ஆளுநர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழகச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் மாளிகையாக மாற்றத் துடிக்கின்றனர் என்றும் திருவள்ளுவரைச் சனாதன அடையாளத்திற்குள் கொண்டு வரப் பார்க்கும் அவர்களின் முயற்சி தமிழகத்தில் பலிக்காது என்றும் தமது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், அதனைத் தடுத்து நிறுத்த முதல்வர் விஜய்யுடன் கலந்தாலோசித்து அனைத்துச் சட்டபூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளரும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான அருண்ராஜ் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம். திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உதயநிதி ஸ்டாலின், வைகோ ஆகியோரும் ஆளுநர் மாளிகையின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

