சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி சென்னையில் ஏற்படுத்திய தொல்காப்பியப் பூங்கா ரூ.42.45 கோடி (S$6.38 மில்லியன்) செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதனை இந்நாள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) திறந்துவைத்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, ‘தொல்காப்பியப் பூங்கா’ உருவாக்கப்பட்டது. அப்பூங்கா 2011 ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.
ஆனால், அதன்பின் முறையான பராமரிப்பு இல்லாததால் தொல்காப்பியப் பூங்கா பொலிவிழந்தது. இதையடுத்து, 2021ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின், பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் பூங்காவில் மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அதன்படி, நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவாயில், கண்காணிப்புக் கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்புப் பாலம், கண்காணிப்புப் படக்கருவிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்றவை அப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட பூங்காவின் திறப்புவிழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், சிறப்பு வாகனத்தில் மாணவர்களுடன் சேர்ந்து அதனைச் சுற்றிப் பார்த்தார்.
அதுபற்றி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மாநகரத்தின் இயந்திர வாழ்க்கைக்கிடையே இயற்கையின் மடியில் இளைப்பாறுதல் தரும் சோலையாக விளங்கும் தொல்காப்பியப் பூங்காவுக்கு மேலும் எழிலூட்டிப் புதுப்பித்துள்ளது தமிழக அரசு. உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் இத்தகைய பசும்போர்வைகளால் சென்னையை அலங்கரிப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

