சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தின்போது, உயிருக்கு அஞ்சி ஓடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள்மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்காக விசாரித்தது. பின்னர் அந்த ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் அவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அவ்வழக்கு திங்கட்கிழமை (ஜூலை 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தொடர்புடைய காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பில் கோரப்பட்டது. அக்கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
அத்துடன், வழக்கு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு அரசு செயலர், தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இவ்வழக்கில், சிபிஐ அமைப்பின் விசாரணை ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அதுபோல இல்லாமல் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்றும், உயிருக்கு பயந்து ஓடிய அப்பாவி மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இதற்கு முன்பு இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததாகக் கேள்விப்பட்டதில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காகவே இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாகக் குறிப்பிட நீதிபதிகள், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைத்தது நியாயமில்லை என்றும் காவல்துறையினர் தங்களது தவற்றை உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.


