சென்னை: குற்ற வழக்குகளில் சிக்கியோர், கடுமையான நிபந்தனைகளுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொதுவாக, குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்க சி.பி.ஐ. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் ‘லுக்அவுட் நோட்டீஸ்’ பிறப்பிப்பது வழக்கம்.
வங்கி மோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடு சென்றுவிடாமல் தடுக்க அதிகாரிகள் இவ்வாறு ‘லுக்அவுட் நோட்டீஸ்’ பிறப்பித்ததால், தொழில் ரீதியாகத் தங்களால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி, “அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பறிக்கும் விதமாக விடுமுறைக்காக, புனிதப் பயணத்துக்காக, தொழில் மேம்பாட்டுக்காக வெளிநாடு செல்லும், குற்ற வழக்குகளில் சிக்கியவர்களைத் தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கக்கூடாது,” என்று தீர்ப்பளிக்கும்போது கூறினார்.
ஒருவரது வாழ்வுரிமைக்குப் பாதிப்பு நேராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளிநாடு சென்றால் மீண்டும் நாடு திரும்பமாட்டார்கள்; தப்பித்துவிடுவார்கள் என எண்ணாமல் மீண்டும் அவர்கள் நாடு திரும்பும் வகையில் புலன்விசாரணை அமைப்புகள் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக்அவுட் நோட்டீசை நிறுத்திவைக்குமாறு விசாரணை நீதிமன்றங்களை அணுகலாம். நிபந்தனைகளுடன் அவர்களை வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுமதிக்கலாம்.
வெளிநாடு செல்வோர், தங்கள் வழக்கு நிலுவையில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் பயண விவரங்களை மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும். ரூ.10 லட்சத்துக்கு சொந்த உத்தரவாதம், அதே தொகைக்கு இரு நபர்களின் உத்தரவாதம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் மனுதாரர் அளிக்கவேண்டும்.
அந்த இருவரில் ஒருவர் உறவினராக இருப்பதுடன் மனுதாரர் குறித்த நாளில் நாடு திரும்புவார் என்று அந்த இரு நபர்களும் உறுதி அளிக்கவேண்டும். இரு நபர்களில் ஒருவர் இந்தியக் கடப்பிதழை வைத்திருக்கவும் வேண்டும். அந்தக் கடப்பிதழை அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாடு சென்ற மனுதாரர் நாடு திரும்பியதும் கடப்பிதழைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

