சென்னை: மொழிக் கொள்கையில் தமிழக அரசு எந்தளவுக்கு உறுதியுடன் இருக்கிறது என்பதை மத்திய அரசுக்கு நிரூபிக்கவே ‘ரூ’ என்ற எழுத்தை வரவுசெலவுத் திட்டத்தில் பெரிதாக வைத்தோம் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
‘உங்களில் ஒருவன்’ எனும் நிகழ்ச்சியின் மூலம் மு.க. ஸ்டாலின், ஆளும் திமுக அரசின்மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் மக்களின் மனதில் எழும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.
மார்ச் 16ஆம் தேதி வெளியான அந்நிகழ்ச்சியின் காணொளியில் அவர் இவ்வாறு விளக்கமளித்திருந்தார்.
மேலும், வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த ‘ரூ’ வை மொழி தெரியாதவர்கள் பெரிதாக்கி விட்டதாகவும் அவர் சொன்னார்.
“மத்திய அரசிடம் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம், பேரிடர் நிதி வழங்க வேண்டும், பள்ளிக்கல்வி நிதி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு சார்பில் நூறு கோரிக்கைகள் வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதிலளிக்காத மத்திய நிதியமைச்சர் ‘ரூ’ குறித்து ஏன் பேசினார் என்பது எனக்கு விந்தையாக உள்ளது,” என்றார் முதல்வர்.
வரவுசெலவுத் திட்ட முன்னேற்பாடுகள் குறித்த கேள்விக்கு, “முதல்வருக்கான பொருளியல் ஆலோசனைக் குழுவில் நோபெல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, அறிஞர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் போன்றவர்கள் நிறைய ஆலோசனைகள் வழங்கினர். மறுபுறம், அடித்தட்டு மக்களிடமும் அவர்களின் தேவைகள் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
“அதுமட்டுமன்றி, மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும் மக்களிடம் வரவேற்பு பெற்ற திட்டங்கள் எவை என்று பார்த்து, அதை நம்முடைய மாநிலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொண்டுர முடிவு செய்தோம்,” என அவர் பதிலளித்தார்.
மேலும், கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை அரசே இலவசமாக வழங்கும் ஊர்க்காவல் படையில் திருநங்கைகளையும் ஈடுபடுத்துவோம் போன்றவை மனதுக்கு நெருக்கமான வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகள் என்று முதல்வர் கூறினார்.