சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற ஒரு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ஒருவரி விடுபட்டதற்குத் தமிழகம் முழுவதுமிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) மாலையில் அதன் பொன்விழாவும் இந்தி மாத நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டன. அதில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அப்போது, அந்நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியைப் பாடாமல் தவிர்க்கப்பட்டது. ‘திராவிடம்’ என்ற சொல் இடம்பெற்றதால் அது தவிர்க்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாகக் கூறி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆளுநரைக் கடுமையாகச் சாடிய முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு அவரைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கு, தமக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை இழைத்துவிட்டேன் என்ற பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் முன்வைத்துள்ளார் என்று ஆளுநர் ரவி எக்ஸ் பக்கம் வழியாகப் பதிலளித்திருந்தார்.
இதனிடையே, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியவர் கவனக்குறைவால் தவறவிட்டுவிட்டதாகவும் அதற்கு ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் சென்னை தூர்தர்ஷன் அலுவலகம் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சென்னையில் சனிக்கிழமையன்று ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி அடங்கிய ஆயிரம் அஞ்சலட்டைகளையும் அவர்கள் ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி உமாபதி, “ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, திட்டமிட்டு திராவிட என்ற சொல்லைத் தவிர்த்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநருக்கு அஞ்சலட்டைகள் அனுப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்காத ஆளுநரை திரும்பப் பெறவேண்டும்,” என்றார்.
இதற்கிடையே, சனிக்கிழமையன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொண்டார். அவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாகப் பாடப்பட்டது.