சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் (EDII) சார்பில், மாணவர்கள், பட்டதாரிகள், தொழில் வல்லுநர்களுக்காக மூன்று நாள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயிற்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் அக்டோபர் 15ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இடிஐஐ வளாகத்தில், ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னிலக்கச் சந்தைப்படுத்தலின் அடித்தளங்கள்’ என்ற அந்தப் பயிற்சி வழங்கப்படும்
இந்தப் பயிற்சி, பங்கேற்பாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவின் முக்கியக் கொள்கைகளையும், மின்னிலக்கச் சந்தையின் வளர்ந்து வரும் பங்கையும் புரிந்துகொள்ள உதவும்.
பயிற்சியில் தேடுபொறிகள், சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்தல், இணையவழி விளம்பரம் ஆகியவை குறித்த அமர்வுகள் இடம்பெறும். மேலும், சந்தைப்படுத்தலை ஏஐ எவ்வாறு மாற்றியமைக்கிறது, அதன் நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் கற்பிக்கப்படும். விளக்கம், நடைமுறைப் பயிற்சி, செயல்விளக்கம் ஆகியவற்றின் மூலம் கற்பிக்கப்படும்.
மாணவர்கள், பட்டதாரிகள், ஆர்வமுள்ள நிறுவனர்கள், அடிப்படைக் கணினி அறிவு கொண்ட பணியாளர்கள். ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க முடியும். மேல்விவரங்களுக்கும் பதிவு செய்வதற்கும் www.editn.in என்ற இணையத்தளத்தை அணுகலாம்.