சென்னை: பிரான்ஸ் செல்வதற்கு போலி நுழைவு அனுமதி சீட்டு (விசா) ஏற்பாடு செய்த கும்பலை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். சிக்கியவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த பிரபாகரன் (28), நவீராஜ் (23), மோகன் காந்தி (38) ஆகிய மூவரும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்ல டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்றனர்.
அங்குள்ள முனையத்தில் குடியேற்ற சோதனைக்காகக் கடப்பிதழை அளித்தபோது, மூவரும் போலி விசாவில் பிரான்ஸ் செல்ல முற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து விமான நிலைய காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மூவரும் ஆறு லட்சம் ரூபாய் கொடுத்து போலி விசாவைப் பெற்றது தெரிய வந்தது.
நாமக்கல்லைச் சேர்ந்த 55 வயதான கண்ணன் என்பவர் இந்த போலி விசாவைப் பெற்றுத் தந்ததாக மூவரும் அளித்த வாக்குமூலத்தின் பேரில் அவரும் கைதானார்.
கண்ணன் ஒரு கல்வி நிறுவனத்தையும் வெளிநாட்டு வேலைக்கான ஆலோசனை நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது சாதிக் சையது எனும் மற்றொரு முகவருடன் சேர்ந்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி 16 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி விசா ஏற்பாடு செய்து கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து, தலைமறைவாகிவிட்ட சாதிக் சையதுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
கடந்த மாதம்தான் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ‘ஹெச்1பி விசா’ திட்டத்தில் முறைகேடு நடப்பதாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் முன்னாள் எம்பி டேவ் டிராட் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில், பிரான்ஸ் போலி விசா கும்பலைச்சேர்ந்த முகவர்கள் சிக்கியுள்ளனர்.

