விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் மேம்பாலத்தில் மூன்று சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பிப்ரவரி 26ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலையில் வேப்பூர் மேம்பாலத்தில் சொகுசு பேருந்தை நிறுத்தியபோது, பின்னால் வந்த இரு சொகுசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதின. விபத்துகுள்ளான பேருந்துகள் மூன்றும் சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்றவை.
தகவல் அறிந்து சமபவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பூர் காவல்துறையும் அப்பகுதி மக்களும் காயமடைந்தவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்துக்குள்ளான சொகுசுப் பேருந்து ஒன்றில் சிக்கிக்கொண்ட ஓட்டுநரை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போராடி மீட்டனர்.
வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணி நீண்டகாலமாக நடைபெற்று வருவதால்தான் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வேப்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

