வேலூர்: காட்பாடி அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயக் கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து விழுந்த விபத்தில் தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த மந்தி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயக் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்றைய தினம் தேவாலயத்தின் மேல்தளம் அமைக்கும் பணியில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மேல்தளச் சாரம் திடீரெனச் சரிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து வந்த காட்பாடி தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியை முடுக்கிவிட்டு, 12 தொழிலாளர்களைக் காயங்களுடன் மீட்டனர்.
படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரக்கோணத்தைச் சேர்ந்த தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் மோப்ப நாய்களுடன் வந்து இடிபாடுகளை அகற்றும் பணியைத் துரிதப்படுத்தினர்.
இடிபாடுகளில் சிக்கிய பெங்களூருவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜான், இமானுவேல், சாமுவேல் ஆகிய மூவரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இக்கொடூர விபத்து குறித்துத் திருவலம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

