சென்னை: மூன்று ரவுடிகள் சென்னை நகருக்குள் நுழைய அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா, லெனின் ஆகிய மூன்று ரவுடிகள் இந்தத் தடையை எதிர்கொண்டுள்ளனர்.
இம்மூவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், முதன் முறையாக இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 137 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர் காலத்தில் சட்டப்பிரிவு 51ஏ உருவாக்கப்பட்டது. அச்சமயம் சென்னையில்தான் முதன் முதலாக காவல்துறை ஆணையர் அலுவலகம் அமைக்கப்பட்டது.
மேலும், மற்ற நகரங்களுக்கு இல்லாத அதிகாரம் சென்னை காவல்துறைக்கு வழங்கப்பட்டது. அவற்றுள் 51ஏ சட்டப்பிரிவைப் பயன்படுத்தும் அதிகாரம் அடங்கும்.
கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இந்த சட்டப்பிரிவைப் பயன்படுத்த முடியும். எனினும், இத்தனை ஆண்டுகளாக சென்னை காவல்துறை ஆணையர் பொறுப்பில் இருந்த யாரும் இதைப் பயன்படுத்தியது இல்லை.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக உள்ள அருண், ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இச்சட்டத்தைப் பயன்படுத்தி, மூன்று ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
“பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் நுழைந்து பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய ரவுடிகளைக் கண்டறிந்து, அவர்கள் கொடுஞ்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், மூன்று ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று ஓர் அறிக்கையில் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ரவுடி லெனின் மீது ஆறு கொலைகள் உள்ளிட்ட 28 குற்ற வழக்குகள் உள்ளன என்றும் சூர்யா மீது ஐந்து கொலைகள் உள்ளிட்ட 64 குற்ற வழக்குகள் உள்ளன என்றும் ஆணையர் அருண் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
எந்த காரணத்திற்காகவும் சென்னைக்குள் இம்மூன்று ரவுடிகளும் நுழையக்கூடாது என்றும், உத்தரவை மீறும் பட்சத்தில் மேற்படி ரவுடிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

