தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகராட்சிகளாகும் மூன்று பேரூராட்சிகள்

1 mins read
8f246d2e-a4f9-400d-96c7-e823098deaad
முன்னர் அறிவித்தபடி ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளும் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 2023-2024ஆம் ஆண்டு சட்டமன்றம் கூடியபோது நடந்த மானிய கோரிக்கை விவாதத்தின்போது, “ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்,” என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அம்மூன்று பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா முக்கியத்துவம், வணிகம் போன்ற தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்துவதற்கான உத்தேச முடிவு எடுக்கப்பட்டு, 2024 ஆகஸ்ட் மாதம் முதற்கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அத்துடன், அந்த அறிவிப்பு தொடர்பில் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் கருத்துகளும் நாடப்பட்டன.

அவ்வாறு திரட்டப்பட்ட அனைத்துக் கருத்துகளையும் பரிசீலனை செய்த தமிழக அரசு, தற்போது ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளும் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுவதாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மேலும், உத்தேச நகராட்சிகளின் வார்டுகளுக்கான எல்லைகளை வரையறை செய்து, அந்நகராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்