தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சேலம், தஞ்சையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா திறப்பு

2 mins read
a5964a16-5bdf-454f-b079-80610c6cc40b
சேலம் மாவட்டம், கருப்பூரில் திறக்கப்பட்டுள்ள சிறு தகவல் தொழில்நுட்பப் பூங்கா. - படம்: எக்ஸ் / டி.ஆர்.பி. ராஜா
multi-img1 of 2

சென்னை: தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள ‘மினி’ தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை (டைடல் பார்க்) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) காணொளி வாயிலாகத் திறந்துவைத்தார்.

மாநிலத்தின் சிறுநகரங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டுசெல்ல தமிழக அரசு நோக்கம் கொண்டுள்ளது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் ரூ.30.5 கோடி மதிப்பிலும், சேலம் மாவட்டம், கருப்பூரில் ரூ.29.5 கோடி செலவிலும் சிறு தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் திறக்கப்பட்டுள்ள ‘டைடல்’ பூங்கா, 3.4 ஏக்கர் நிலத்தில், 55,000 சதுர அடி அலுவலகப் பரப்பளவுடன் அமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தொழில்துறைகள் நவீன வசதிகளுடன் செயல்படுவதற்கான தளத்தை ஏற்படுத்தித் தருதல், உள்ளூர் வணிகங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதே அதன் நோக்கம்.

அதுபோல, தேவையான உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் தொழில்துறைச் செயல்பாடுகளை மேம்படுத்தி, தொழில்துறையை செழிப்படையச் செய்யும் வகையில் கருப்பூர் ‘டைடல்’ பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகம் (டைடல்) மூலம் இந்தச் சிறு தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் ஏற்கனவே பெரிய அளவிலான ஐடி பூங்காக்களை அமைத்துள்ள ‘டைடல்’ கழகம், தற்போது சிறு நகரங்களிலும் அத்தகைய பூங்காக்களை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

அவ்வகையில், மதுரையில் 5.63 ஏக்கரில் அமையவிருக்கும் ‘டைடல்’ பூங்காவிற்கான கட்டுமானம் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற முயற்சிகள், இந்தியாவின் முன்னணித் தொழில்துறை மையமாகத் திகழும் தமிழகத்தின் நிலையை மேலும் உயர்த்துவதுடன், ஏராளமான இளையர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்