சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிரசாரம் செய்வதற்காக வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) தமிழ்நாட்டுக்குச் செல்கிறார்.
பிரதமரின் வருகையை ஒட்டி டெல்லியிலிருந்து சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) ஏஐஜி அமி சந்த் யாதவ் தலைமையிலான குழுவினர் சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்தனர். அங்கு அவர்கள் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.
பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, பாதுகாப்புக் காரணங்களுக்காக சென்னையில் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆளில்லா வானூர்திகள், வெப்பக் காற்று பலூன்கள் உள்ளிட்டவற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பாதுகாப்புக் குழுவினர் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்திற்குச் சென்று, அங்கு பொதுக்கூட்டம் நடக்கும் பகுதி, பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்கும் இடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்யவுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் வருகை வரை பழைய சென்னை விமான நிலையத்தை விரிவான பாதுகாப்பின்கீழ் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

