சென்னை: ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளை இணைக்கும் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்க 4 மாதங்கள் கெடு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
“சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், ‘‘ஊராட்சி ஒன்றியங்களை பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுடன் இணைக்கும் திட்டத்தில், நலத்திட்டங்களைப் பெற முடியாது என்ற அடிப்படையில் சிற்றூர்களே ஒன்று திரண்டு அரசுக்கு மனுக்களை தருகின்றனர்.
“எனவே, இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க முதல்வருடன் கலந்து பேசி நல்ல தீர்வை அமைச்சர் காண வேண்டும்,’‘ என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கே.என்.நேரு, ‘‘தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.
“இதில், மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைப்பது, பேரூராட்சிகளாக உருவாக்குவது என்பது வெறும் 371 ஊராட்சிகள் மட்டும்தான். அதில் கூட, 120 நாட்கள் நேரம் அளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சிற்றூர்களை பெரிய ஊர்களுடன் இணைப்பதில் மக்களுக்குப் பிரச்சினை இருந்தால் அதை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம்.
ஆட்சியர் அந்தப் பிரச்சினை குறித்து அரசுக்குத் தெரிவிப்பார். பின்னர் அது குறித்து அரசு முடிவு செய்யும் என்று கூறினார்.

