கோயம்புத்தூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த முறையும் கடந்த தேர்தலைப் போல் கரூர் தொகுதியில்தான் போட்டியிடப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அவர் கரூர் தொகுதிக்குப் பதிலாக கோயம்புத்தூரில் போட்டியிடுவதற்குத் தயாராகிறார் என்று செய்திகள் பரவின. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவர், கரூரிலேயே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் செந்தில் பாலாஜி போட்டியிடப் போவதாக சமூக வலைத்தளங்களிலும் கருத்துகள் பரப்பப்பட்டன.
மேலும், கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரை எதிர்கொள்ள முடியாமல் செந்தில் பாலாஜி கரூரை விட்டு கோயம்புத்தூருக்கு ஓடுவதாக விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் தகவல் பரப்பினர்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செந்தில் பாலாஜி, “நான் இந்த முறையும் கரூரில் தான் போட்டியிடப் போகிறேன். கோவையில் நான் போட்டியிடப் போவதாக சமூக வலைத்தளங்களைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்,” என்றார்.
“கரூர் மக்கள் நான் இதுவரை போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். கரூர் மக்கள் என்னை அன்பாக, பாசமாக வைத்துள்ளனர். இன்னும் என் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
“கரூர் தொகுதி எனக்கு நன்றாகத்தான் உள்ளது. எனவே, நான் கோவையில் போட்டியிடப் போகிறேனா என்ற சந்தேகங்கள் வேண்டாம்.
“சமூக வலைத்தளங்களில் பேசுவதைப் பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பல்லடத்தில் நடைபெறும் மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் கோவையிலிருந்து 50 ஆயிரம் பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“வரைவு வாக்காளர் பட்டியலில், தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளனரா, போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா என்று வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்யச் சொல்லி இருக்கிறோம். அதன் பின்னரே, ஆட்சேபனைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்கப்படும்.
“வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் மூலம் திமுகவினரின் கள்ள வாக்குகள் தடுக்கப்பட்டதாக பாஜகவும் அதிமுகவும் கூறி வருகின்றன. இப்போது நீ்க்கப்பட்டவர்கள் எல்லாம் எந்த ஆண்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்?
“பாஜக கூட்டணிக் கட்சியான அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, இந்த கள்ள வாக்குகள் அவர்களது கண்ணுக்குத் தெரியவில்லை. அப்போது எல்லாம் இவை நல்ல வாக்குகளான இருந்ததா என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
“ஏற்கெனவே இருக்கும் கட்சியானாலும், புதிதாக வரும் கட்சியானாலும் திமுகவை விமர்சனம் செய்யாமல் அவர்களால் அரசியலில் இருக்க முடியாது.
“திமுகவை விமர்சித்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும் என்பதால் திமுகவை விமர்சித்தே ஆக வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
“கடந்த மக்களவைத் தேர்தலில் கோவையில் ஒருவர் போட்டியிட்டார். வாக்குப் பதிவுக்கு முன்பாகவே, அவர் வெற்றி பெற்றுவிட்டது போல் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
“தற்போதும் அப்படியான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறீர்கள். அவர் வீட்டில் இருந்துகிளம்பும் போதே ‘லைவ்’ போடுகிறீர்கள். ஆனால், முதல்வர் யார் என்பதை ஊடகங்கள் முடிவு செய்யமுடியாது. மக்கள் தான் தீர்மானிப்பர்,” என்றார் செந்தில் பாலாஜி.

