திண்டிவனம்: பள்ளி மாணவர்களைத் தேனீக்கள் கொட்டியதால் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் அருகேயுள்ள கருவம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அப்பள்ளி வளாகத்திலுள்ள ஒரு கட்டடத்தில் தேனீக்கள் கூடுகட்டுவது வழக்கமாக இருந்துவந்துள்ளது. நிர்வாகமும் அந்தத் தேன்கூட்டை அடிக்கடி கலைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று தேன்கூட்டின்மீது மாணவர்கள் சிலர் கல் எறிந்ததாகக் கூறப்பட்டது. இதனால், கூட்டிலிருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கிருந்த மாணவர்களைக் கொட்டத் தொடங்கியது. இதனால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர். ஆயினும், தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்கள் உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, தேனீக்கள் கூடுகட்டும்வரை பள்ளி நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது என்று மாணவர்களின் பெற்றோர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.


