தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருச்செந்தூர் கோவில்: வீதி உலாவின்போது தள்ளுமுள்ளு

2 mins read
0768d685-fc46-4242-98f2-5843ba7def31
திருச்செந்தூரில் கொடிப்பட்டத்தைப் பெறுவதில் இரு சாராருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா ஆகஸ்ட் 14 முதல் 25ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும்.

திருவிழா நாட்களில் காலை மற்றும் மாலையில் சாமி வீதி உலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10ஆம் திருநாள் தேரோட்டம் வருகிற 23ஆம் தேதி காலை 7 முதல் 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

இதையொட்டி புதன்கிழமை, திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 12ஆம் திருவிழா மண்டபத்தில் வைத்து 14 ஊர்க்காரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது, கொடிப்பட்டத்தைப் பெறுவதில் இரு சாராருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இந்த மோதல் காரணமாக வீதி உலா சுமார் ஒரு மணி நேரம் சுணக்கமானது.

இதையடுத்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, பேஸ்கார் ரமேஷ் ஆகியோர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இருதரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கொடிப்பட்டத்தை திருச்செந்தூர் முருகன் கோவிலின் துணைக் கோயிலான சிவக்கொழுந்தீசுவரர் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு கொடிப்பட்டத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு கொடிப்பட்டம் கோயில் யானை தெய்வானை மீது ஏற்றப்பட்டு திருச்செந்தூர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 

இந்தச் சம்பவத்தின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகக் கொடிப்பட்டம் கொண்டு செல்லப்பட்டது. கோவில் கொடிப்பட்டம் எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சினை திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்