திருப்பதி லட்டு விவகாரம்: ஏ.ஆர். டெய்ரிஃபுட் நிறுவனம்மீது வழக்குப்பதிவு

திருப்பதி லட்டு விவகாரம்: ஏ.ஆர். டெய்ரிஃபுட் நிறுவனம்மீது வழக்குப்பதிவு

2 mins read
dc1030e2-ef47-44df-92e6-34eb91053d9e
படம்: - ஊடகம்

திண்டுக்கல்: திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு கலப்பட நெய் வழங்கிய புகாரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரிஃபுட் நிறுவனம் மீது திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பக்தா்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் விலங்கு கொழுப்பு சோ்க்கப்பட்டதாக மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் குற்றஞ்சாட்டினாா்.

லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது ஆய்வறிக்கையிலும் உறுதியானதாக ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்திருந்தது.

இதனிடையே, லட்டு பிரசாதத்துக்கான நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாருக்கு சொந்தமான ஏ.ஆர். டெய்ரிஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணய ஆணைய தென் மண்டல அலுவலா்கள் செப்டம்பர் 21ஆம் தேதி சோதனை நடத்தினர். சுமாா் 14 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, நெய் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் பகுப்பாய்வுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

பால் நிறுவனம் பெற்ற உரிமம், தரச்சான்றுகள் உள்ளிட்டவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பால் பொருள்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகளின் முடிவுகள் கிடைத்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், திருப்பதி லட்டு பிரசாதத்திற்குக் கலப்பட நெய் வழங்கிய புகாரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ஏ.ஆர். டெய்ரிஃபுட் நிறுவனம் மீது திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பை ஏற்படுத்தும் கலப்படம் செய்த பொருளை விற்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்