திருப்பூர் தொழில்துறையினர் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்: பியூஷ் கோயல்

திருப்பூர் தொழில்துறையினர் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்: பியூஷ் கோயல்

1 mins read
80aabc16-caae-4633-8b68-b5af4ab29e8b
அமைச்சர் பியூஷ் கோயல். - படம்: ஈடி கவர்ன்மென்ட்

திருப்பூர்: அடுத்த மூன்று ஆண்டுகளில் திருப்பூர் தொழில்துறையினர் ஏற்றுமதி செயல்திறனை இரட்டிப்பாக்கி, ஐந்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பூர் ஜவுளி ஆயத்த ஆடை தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் காணொளி மூலம் அவருடன் உரையாடினர். அப்போது ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என்று திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா இதுவரை 38 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்ளாதேஷ் ஏற்கெனவே அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் காரணமாக, பருத்தி தகுதி சலுகைகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவும் இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட உள்ளதாகத் தெரிவித்தார். அப்போது இந்தியாவுக்கும் அதேபோன்று நன்மைகள் கிடைக்கும் என்றார் அவர்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் வாய்ப்புகளை அனைத்து தரப்பினரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதனால் கிடைக்கும் பலன்கள் நாடு முழுவதும் உள்ள தொழில்துறைக்கும் அதில் பணிபுரியும் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார்.

இந்திய ஜவுளித்துறையை பங்ளாதேஷ் அழித்துவிடும் என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலுடன் காணொளி வழி சந்திப்பு நடத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்