தலைப் பொங்கல்: மணமகனுக்கு 470 வகை உணவுடன் விருந்து

2 mins read
802560ec-3545-4f54-a2ac-9408ff991dfc
புதுச்சேரி ஏனாம் பகுதியில் புது மாப்பிள்ளைக்கு மணமகள் வீட்டார் வைத்த 470 உணவு வகைகளுடன் கூடிய விருந்து. - படம்: இந்து தமிழ் திசை

புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பொங்கல் திருநாள் ‘மகரசங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள ஏனாம் பகுதியில் ஒரு புது மண ஜோடி தங்களது தலைப்பொங்கலைக் கோலாகலமாகக் கொண்டாடி உள்ளது.

தங்களது வீட்டுக்கு வந்த புது மாப்பிள்ளைக்கு 470 உணவு வகைகளைப் பரிமாறி தடபுடலாக விருந்து வைத்து அசத்தி உள்ளனர் பெண் வீட்டார்.

புதுச்சேரி, ஏனாம் பகுதியைச் சேர்ந்த சத்ய பாஸ்கர் வெங்கடேஸ்வர், வர்த்தக சங்க செயல் தலைவராகவுள்ளார்.

இவரது மகள் டாக்டர் ஹரின்யாவுக்கும் விஜயவாடாவைச் சேர்ந்த ஷாகேத்துக்கும் அண்மையில் திருமணமானது.

புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் முதல் சங்கராந்திக்காக மணமகள் வீட்டுக்கு இருவரும் வருகையளித்தனர்.

வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை ஆச்சரியப்படுத்தும் வகையில் 470 வகையான உணவுகளை விருந்தாக படைத்து ஆச்சரியப்படுத்தினர்.

இதில் 20 வகையான அரிசி உணவுகள், 30 வகை புதிய ஊறுகாய், 20 பொடிகள், 40 வகை காய்கறிகள், 20 வகையான பழங்கள், 50க்கும் மேற்பட்ட இனிப்புகள் இடம்பெற்றிருந்தன.

மேலும் சில சிறப்பான உணவு வகைகளையும் தயாரித்து புதுமாப்பிள்ளையை திக்குமுக்காடச் செய்து விட்டனர்.

“நாங்கள் நான்கு சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக உள்ளோம். சங்கராந்திக்கு வழக்கம்போல் மாப்பிள்ளையை அழைத்து விருந்து வைத்தோம்.

“நாங்கள் சைவம் என்பதால் சுவையுடன் கூடிய 470 உணவு வகைகளும் சைவத்திலேயே செய்திருந்தோம். மாப்பிள்ளை வரவை ஒரு விழா போல் கொண்டாடி மகிழ்கிறோம். மாப்பிள்ளையுடன் உறவினர் அனைவரும் வந்திருந்தது எங்களுக்குப் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது,” என்று தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்