சேலம்: நூறு அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த தம்பதியைத் தமிழகத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 42. விவசாயியான அவருக்குச் சொந்தமாக 100 அடி ஆழக் கிணறு ஒன்றுள்ளது. அதில் 30 அடிக்கு நீர் உள்ளது.
இந்நிலையில், வெங்கடேஷ் தம் மனைவி கவிதாவுடன் அவ்வழியாகச் சென்றபோது, இருவரும் கிணற்றுக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் அலறலைக் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றனர்.
இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. அதனால், ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கயிற்றையும் மீட்பு வலையையும் பயன்படுத்தி, கணவன், மனைவி இருவரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

