திருப்பத்தூர்: நாட்டு வெடிகுண்டைக் கடித்த பசுவின் வாய் கிழிந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ராளகொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. அவரது பசு மாடு, ராமமூர்த்தி என்பவரது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது.
அப்போது, நாட்டு வெடிகுண்டைக் காய் என நினைத்து பசுமாடு கடித்ததில் அதன் வாயும் தாடையும் கிழிந்து, உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றது.
அதனையடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரித்த காவல்துறை, அருகிலுள்ள ஊர்களைச் சேர்ந்த சதீஷ், சீனிவாசன் என்ற இரு இளையர்களைக் கைதுசெய்தது.
அவர்கள் இருவரும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு விவசாய நிலங்களில் ஆங்காங்கே நாட்டு வெடிகுண்டுகளை வைத்ததும் அவற்றில் ஒன்று வெடித்து மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுவின் வாய் மற்றும் தாடை கிழிந்ததும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, காவல்துறை அவ்விருவர்மீது வழக்குப்பதிவு செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தது.

