சென்னை: அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை தாவரங்களைக் காக்கும் வகையில் பூர்வீக இனவிதைப் பெட்டகம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக வளர்ந்து வந்த அரிய வகை தாவர இனங்கள், முற்றிலுமாக அழிந்து போகும் நிலையில் உள்ளன.
வெளிநாடுகளில் இருந்து அலங்காரத்துக்காகக் கொண்டு வரப்படும் தாவரங்கள், தமிழக மண்ணில் அபரிமிதமாக வளர்ந்து வருகின்றன.
இதனால், மக்கள் அரியவகை தாவரங்களை மறந்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதையடுத்து நிபுணர்களின் கோரிக்கையை ஏற்று கோவையில் உள்ள தமிழக வன, உயர், பயிற்சியக மரபியல் பிரிவில், பாரம்பரிய தாவரங்களின் பூர்வீக இன விதை, பெட்டகம் அமைக்கப்படும் என தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி, இப்புதிய திட்டத்துக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவை வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘கிரயோஜெனிக்’ குளிர்சாதன வசதியுடன் விதை பெட்டகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக வனம், சுற்றுச்சூழல் அமைச்சு முதற்கட்டமாக ரூ.10.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

