தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதுவரை காணாத மாறுபட்ட அரசியல் களத்தில் வென்று, தமிழகத்தை ஆளப்போவது யார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகம் கண்ட விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது இன்றைய தீர்ப்பு.
நடிகர்களின் முதல் தேர்தலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், எம்ஜிஆரும் என்டிஆரும் முதல் தேர்தலிலேயே வென்று முதல்வர் ஆனார்கள். 18 தொகுதிகளில் வென்றவர் சிரஞ்சீவி. எல்லாத் தொகுதிகளிலும் வாக்குகளை வாங்கினாலும் ஒருவர் மட்டும் வென்றார் என்றால் அவர் விஜயகாந்த். விஜய்யின் வெற்றி அவர் எம்ஜிஆரா, சிரஞ்சீவியா, விஜயகாந்தா என்பதைத் தெரிவித்துவிடும்.
நான்கு முனைப் போட்டியாகத் தொடங்கிய தேர்தல் களம் மும்முனையாகச் சுருங்கிவிட்டது. அதிமுக, திமுக, தவெக ஆகிய கட்சிகளைச் சுற்றியே எதிர்பார்ப்பு வளையம் உருவாகி உள்ளது. சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் மாற்றத்திற்கான தங்கள் நம்பிக்கையை விஜய் மீது வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை அள்ளித் தரும் வாக்குகளை இன்று காணலாம். மாணவர்கள், இளையர்கள், பெண்கள் எல்லாரும் கைதூக்கி ‘விஜய் அண்ணா’ என்று முழக்கமிட்டது எந்த அளவுக்குப் பலன் தந்துள்ளது என்பதும் இன்றே தெரிந்துவிடும்.
‘அவர் வெல்வார்’, ‘இவர் வெல்வார்’ என்ற கணிப்புகள் இன்றுடன் விடைபெறுமா என்பதற்கு இன்று விடை தெரியாது. காரணம், வாக்கு எண்ணிக்கை முடிவுகள், எதிர்பாராத குழப்பத்தைத் தந்தால் இன்னும் சில கணிப்புகள் வரலாம்.
சிறுபான்மையோ பெரும்பான்மையோ அதிமுக அல்லது திமுகவைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்பதே வரலாறு உணர்த்தும் உண்மை. எந்த ஓர் அரசியல் சுனாமியிலும் வெற்றியை மீட்டெடுப்பது என்பது அந்த இரு பெரும் கட்சிகளுக்கும் கைவந்த கலை. கைதேர்ந்த களப்பணியும் வியப்பூட்டும் பணபலமும் அவற்றின் பக்கபலங்கள்.
வரலாறு உடைக்கப்பட்டு, புதியவர் முதல்வர் ஆவதற்கான குறுகிய வாய்ப்பு உருவானாலும் அது குறுகிய காலத்திற்கே நீடிக்கக்கூடும். பெரும்பான்மை இல்லாத எந்த ஓர் அரசாங்கமும் நிபந்தனையின்கீழ் ஆட்சிபுரிய வேண்டிய நிர்பந்தத்திலேயே செயல்படும். தாங்கிப் பிடிக்கும் கட்சிகள் சொல்வதை எல்லாம் செய்யவேண்டும் அல்லது அவை கேட்பதற்கு முன்னரே நிறைய செய்ய வேண்டி இருக்கும். பெரும்பான்மை இல்லாததால் ஆந்திர, பீகார் கட்சிகளின் ஆதரவில் இயங்கும் திரு நரேந்திர மோடியின் அரசாங்கம் அதற்கு உதாரணம்.
ஆக, இன்றைய தீர்ப்பு நாளைய அரசியலையும் அரசாங்கத்தையும் உருமாற்றும் அளவுக்கு வலுவானதா என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். -திருநா

