மதுரை: தமிழகத்தில் கள்ளுக்கான தடை தொடர்வது ஏன் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாநில அரசு விரிவான விளக்கமளித்துள்ளது.
கள் சேகரிப்பு முதல் விற்பனை வரை எந்தக் கட்டத்திலும் கலப்படம் நடக்க அதிக வாய்ப்புள்ளதால், பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டே இந்தத் தடை அமலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும், அதனை விற்பனை செய்யவும் விதிக்கப்பட்டுள்ள தடையை மறுஆய்வு செய்யக் கோரி தீரன் திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கலப்படம் செய்யப்பட்ட கள் மனித உயிருக்கே பெரும் ஆபத்தாக முடிகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பனை மரமும் ஓர் உற்பத்தி மையமாகச் செயல்படுவதால், ஒவ்வொரு மரத்தின் கீழும் நடக்கும் கள் உற்பத்தியை அரசின் சார்பில் தனித்தனியாகக் கண்காணிப்பது சாத்தியமற்றது என்றும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளையில், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அரசு, புளிக்காத இயற்கை பானங்களான ‘நீரா’, ‘பதனீர்’ ஆகியவற்றை இறக்கவும் விற்பனை செய்யவும் ஏற்கெனவே அனுமதி உள்ளதை நினைவூட்டியது. பனைப் பொருள்கள் மேம்பாட்டு வாரியம் மூலம் இவை சந்தைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெளிவுபடுத்தியது.
இதையடுத்து வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
