தமிழகச் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7% வரை கட்டண உயர்வு

தமிழகச் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7% வரை கட்டண உயர்வு

1 mins read
fc74598a-c3d9-495f-b98f-9fd37b913ab2
சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வரும் செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படும்.  - கோப்புப்படம்: மாலை மலர்

சென்னை: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் 5 முதல் 7 விழுக்காடு வரை உயரக்கூடும் எனத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 77 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் 66 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுங்கச்சாவடிக் கட்டணம் உயரும்போது போக்குவரத்துக் கட்டணம், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகும் என்பதால் கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும் எனப் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.

சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வரும் செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படும்.

கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்கள் அடிக்கடி பயன்படுத்துவதற்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருடாந்தர ‘ஃபாஸ்ட் டேக்’ அட்டை கட்டணம் ரூ.3,000ல் இருந்து ரூ. 3,075ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் கட்டண உயர்வால் கடும் நெருக்கடியில் இருப்பதாக வியாபாரிகள், வாடகை வாகன உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், சுங்கச்சாவடிக் கட்டணமும் உயர்த்தப்பட்டால் பொதுமக்கள் வாடகை வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்த்து, ‘வந்தே பாரத்’ போன்ற ரயில் சேவைகளை நோக்கி நகரக்கூடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

எனவே, வாடகை வாகனங்களுக்குச் சிறப்புச் சலுகை அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக உள்ளது.

சுங்கச்சாவடிக் கட்டண உயர்வால் தனியார் ஆம்னி பேருந்துக் கட்டணம், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரக்கூடும் என நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்