சென்னை: தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 78 சுங்கச் சாவடிகளை நிறுவி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் 5% முதல் 10% வரை கட்டணத்தை மத்திய அரசு உயர்த்துகிறது.
இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துக் கட்டணம் வசூலித்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் 6 ஆயிரத்து 606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 78 சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. இக்கட்டணத்தை ஆண்டுதோறும் 5% முதல் 10% வரை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்கீழ் ஏறக்குறைய 15 மில்லியன் கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 5 முதல் 7 விழுக்காடு வரை (ரூ.5 முதல் ரூ.70 வரை) சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கார், ஜீப் போன்றவை ஒரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை. இரு முறை பயணிப்பதற்கான கட்டணம் 5 ரூபாயாகவும் மாதாந்தர கட்டணம் 70 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உட்பட பல இடங்களிலும் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
2023-24ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் சுங்கக் கட்டணமாக ரூ.4,221 கோடி வசூலிக்கப்பட்டது. இது நாட்டிலேயே ஐந்தாவது இடத்தில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தக் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என வியாபாரிகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் ஏ.எம்.விக்ரம ராஜா, “கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் விலையை 10 முதல் 15 விழுக்காடு வரை உயர்த்தும். இது பொதுமக்களுக்குச் சுமையாக அமையும்,” எனக் கூறினார். மேலும், சாலைகளின் பராமரிப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் முறையாக நடைபெறவில்லையென பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்தக் கட்டண உயர்வுக்குத் தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
முன்னதாக, போக்குவரத்து ஆர்வலர்கள் இந்தக் கட்டண உயர்வு ‘தேவையற்ற சுமை’ என விமர்சித்துள்ளனர். மேலும், 60 கி.மீ. தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது விதிமீறல் எனவும், இதை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுப்பியுள்ளனர்.