தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுங்கக் கட்டண உயர்வு மக்களுக்குப் பெருஞ்சுமை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

2 mins read
0155c8f5-788c-4ed9-9f1f-0d897e9f1797
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மத்திய அரசு சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதால் பொதுமக்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாவர் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடு வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

தொடரும் சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும். இதனால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இது பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சுங்கக் கட்டண உயர்வு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

போக்குவரத்து தொழிலுக்கும், பயணிகள் போக்குவரத்திற்கும், வணிகர்களுக்கும் தொடர்ந்து பயணம் சம்பந்தமான தொழில்களை மேற்கொள்பவர்களுக்கும், இது ஒரு மிகப்பெரும் சுமையாக அமையும். அத்துடன் தொடரும் சுங்கக் கட்டண உயர்வு அத்தியாவசிய பொருள்களான உணவுப் பொருள்களின் மீது விலைவாசி உயர்வுக்கும், நுகர்வோர்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே அனைத்துத் தரப்பினர் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.

இது தவிர, காலாவதியான சுங்கச் சாவடிகளையும் அகற்றிட பேரமைப்பு வலியுறுத்தி வருகின்றது. தமிழக சுங்கச் சாவடிகளில் மட்டுமே ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ.4,200 கோடி சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கட்டண உயர்வு என்பது, பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக இந்த சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைத்திட வேண்டும் என்று மத்திய அரசுக்கு திரு ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சாமானிய மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு மீட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்